Sunday 12 May 2019

ரகசியம்

எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது
அது என்னை அடிக்கும், அணைக்கும்
சிரிக்கும், திட்டும், கொஞ்சும்,மிஞ்சும்
என் உணர்ச்சி குவியலின் பிரதிபலிப்பு
எனக்காக மட்டுமே வாழும் என் உயிர்

எல்லை தாண்டி வரும்போது
ஒரு வரம் கொடுத்து வந்திருக்கிறேன்
என்னில் முளைத்த பூவை பார்த்து கொள்ள சொல்லி
என்னை தெரிந்த அனைவருக்கும் தெரியும்
எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறதென்று
ஆனால் அவள் பீற்றிக்கொள்கிறாள்
அவள் என் தாய் என்று
தாய் குழந்தை!

Tuesday 10 June 2014

வலி (கணவனின் வெளியூர் பயணம்)

பிரசவ வலி என்ன இரண்டு மாதங்களா?
இனியும் வேண்டாம் இன்னொரு குழந்தை

Sunday 5 August 2012

எந்த பக்கம் திரும்பினாலும், அந்த பக்கம் நீ இருக்க

எந்த பக்கம் திரும்பினாலும்
அந்த பக்கம் நீ இருக்க

காலையில எழுந்திரிச்சு
மொகத்த நானும் கழுவிக்கிட்டு
கண்ணாடியில பாத்தாக்கா
கண்ணுக்குள்ள நீ இருக்க

வெட்கங் கெட்ட சிறுக்கிக்கு
விடிஞ்சதின்னும் தெரியலியோ
மத்தியானம் ஆயிருச்சு
மச்சான் நெனப்பின்னும் போகலயோ??

கருவாட்ட திங்கும் போது
உப்பு கரிக்கயில நீ இருக்க
புளிதண்ணி வச்சாலும் - தொட்டுகிட
கானத் தொவயலாவும் நீ இருக்க

அந்தியும் தான் மசங்கிருச்சு
ஆதவனும் மறச்சிருச்சு
அத்தானு கூப்பிடத்தான்
ஆசையும் தான் வந்திருச்சு

கண்ண நானும் தொடச்சிக்கிட்டு
கவிதை எழுத நெனச்சாக்கா
வார்த்தைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு
கவிதையாத்தான் நீ இருக்க

மொழு மொழுனு எண்ண வச்சு
மொட்டு போல பின்னல் போட்டு
மண மணக்க மல்லி வச்சு
மச்சான தேடிக்கிட்டு வாசல் வர வந்தாச்சு

காட்டுக்கு போனவுக
காலடிச்சத்தம் கேட்டுடுச்சு
இந்தாரு வெள்ள நிலா
கண்ண நீயும் மூடிக்கடே!!

Monday 28 May 2012

காதலினைப் புரிந்தாயோ?

கொஞ்ச நேரப் பிரிவுக்கே
கதி கலங்கி போனேனே
கை பையோடு உன்னையும் தான்
கொண்டுவர நினைச்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

உன் கையொடு கைகோர்த்து
கடல்மணலில் நடந்துவர
சிறு மணலும் வெட்கப்பட்டு
கடல் கொண்டு கண்மூட
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

ஆக்ஸிஜனும் நுழையாத
ஊருக்கு நாம் போவோமா?
அடையாளம் தெரியாம
அங்கேயே தொலைவோமா?
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

இதுவரைக்கும் சொல்லாத
புதிய வார்த்தை படிச்சேனே
என்னங்க னு சொல்லி சொல்லி
ஏங்கி ஏங்கி தொலைஞ்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

அந்த அழகிய நிமிடங்கள்

பட்டு சீல கட்டிக்கிட்டு - உன்
பக்கத்துல நிக்கயில
ஊரே வந்து நின்னபோதும்
ஒருத்தர் கூட தெரியலியே

கை காலு நடுங்கரத
கண்ணில் யாரும் காணாம
பூச்செண்ட புடிச்சுக்கிட்டேன்
புது வெட்கம் பூசிக்கிட்டேன்

நண்பர் கூட்டம் சேர்ந்துகிட்டு
நையாண்டி செஞ்ச போதும்
தல நிமிர்ந்து பார்க்கலயே
தெளிவா ஏதும் கேக்கலயே

தாலி கட்டும் நேரத்தில
விரல் கொஞ்சம் தீண்டயில
நெஞ்செல்லாம் படபடக்க
கொஞ்சம் அழுகையும் தான் சேர்ந்து வர

நெத்தி பொட்டு வெக்கயில
இதுதான் நமக்கு நேரமுன்னு
தோளோடு சாஞ்சுக்கிட்டேன்
உன் பூ வாசம் தெரிஞ்சுக்கிட்டேன்

உன் விரல் பிடிச்சு சுத்திவர
நீ விஷமங்கள் செய்துவிட
சிரிக்கவும் முடியலியே
சிலிர்க்கவும் முடியலியே

வெள்ளி மெட்டி கொண்டு வந்து
கால் விரல் பிடிச்சு போடயில
எங்கிருந்து வந்திருச்சோ
இனம் தெரியா இளஞ்சூடு

பாலும் பழமும் தந்தவுக
பேசி பேசி என்ன ஏமாத்த
அத கண்டு நீ சிரிக்க
அந்த அழகில் சொக்கி போனேனே

இந்த காதல்

தவிப்பும் தாகமும்
தணியாது இந்த காதலில்

சண்டையும் சமாதானமும்
சாதாரணம் இந்த காதலில்

குழந்தையும் குமரியும்
குணமொன்றே இந்த காதலில்

கிழவியோ கிள்ளையோ
கிளியோபாட்ரா இந்த காதலில்

இடைவெளியும் இணைதலும்
இல்லாததேது இந்த காதலில்

முத்தமும் முறைப்பும்
முக்கியம் இந்த காதலில்

வெட்கமும் விலகலும்
வேண்டும் இந்த காதலில்

தொடுதலும் தொல்லையும்
தொந்தரவில்லை இந்த காதலில்

அடித்தலும் அணைத்தலும்
அஹிம்சை தான் இந்த காதலில்

ஆச்சாரமும் அபச்சாரமும்
அர்த்தமில்லை இந்த காதலில்

அச்சமும் அடமும்
அழகுதான் இந்த காதலில்

பிரிதலும் புரிதலும்
புதுமையில்லை இந்த காதலில்

பணமும் பரதேசியும்
பேதமில்லை இந்த காதலில்

கொஞ்சலும் கெஞ்சலும்
கொசுறு தான் இந்த காதலில்

கல்யாணமோ கல்லறையோ
காதல் தான் இந்த காதலில்

Saturday 10 March 2012

பெண்ணே என் பெண்ணே

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
சிரிச்சுகிட்டே பொறந்திட்டா
தரணி ஆள வந்துட்டா
மலடி என்ற என் பெயர
மாத்திடவே வந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பள்ளிகூடம் போனவ தான்
ஃபஸ்ட் மார்க்கும் வாங்கிப்புட்டா
வாத்தியாரும் புகழும் வண்ணம்
நல்ல பண்போட வளந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
படிப்பு மட்டும் போததுன்னு
கலைகளையும் கத்துக்கிட்டா
ஆத்தே எம்மவலா??னு
ஆச்சர்யத்த குடுத்துப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வயசுக்கு வந்தவ தான்
வறம்போட நடந்துக்கிட்டா
நா சொல்லி ஏதும் கொடுக்கலியே??
நாகரிகம் தெரிச்சுக்கிட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பட்ட படிப்பு படிச்சு வந்தா
கை தொழிலும் தெரிச்சு வந்தா
தான் வளந்த ஊருக்கே
தாசில்தாரா மாறி வந்தா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடக்கத்தோட வளத்த பொண்ணு
ஆள எப்போ கத்துகிட்டா?
ஆத்தாடி எம்மவ தான்
எங்கிராமத்த உசத்திப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடுப்படிக்குள் நொலஞ்சவதான்
அத்தனையும் சமச்சுப்புட்டா
மீன் கொழம்பு மணக்கயில
ஏ ஆத்தாவ மிச்சிப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வாக்கப்பட்டு போனவதான்
பதவிசா நடந்துகிட்டா
என் மருமக தான் உசத்தியின்னு
மாமியார சொல்ல வச்சுப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பொன்மகளே பொற்கொடியே
நா பெத்தெடுத்த பெண்புலியே
வையகமும் வாழ்த்தவேணும்
பல்லாண்டு வாழவேணும்